கோலாலம்பூர், அக்டோபர்.07-
அரசாங்கத்தின் அதிகாரத்துவ நிகழ்ச்சிகளில் மதுபானம் உபசரணை கூடாது என்றும், இது போன்ற நிகழ்வு இனி நடக்கக்கூடாது என்றும் சுற்றுலா, கலை, பண்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ தியோங் கிங் சிங்கிற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கடும் எச்சரிக்கையை விடுத்தார்.
சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்த அரசாங்க நிகழ்ச்சி அனைத்தும் முடிவுற்றப் பின்னரே ஆகக் கடைசியாக மதுபான உபசரணை நடைபெற்றதாக சுற்றுலா அமைச்சு அளித்துள்ள விளக்கம் ஏற்புடையது அல்ல என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.
அரசாங்கத்தின் எந்தவொரு நிகழ்விலும் மதுபான உபசரணைக்கூடாது என்பது அரசாங்கம் ஒரு கொள்கையாக கொண்டுள்ளது என்று டத்தோ ஶ்ரீ அன்வார் விளக்கினார்.
தாம் விடுத்துள்ள இந்த நினைவுறுத்தலானது, சுற்றுலாத்துறை அமைச்சர் தியோங் கிங் சிங்கிற்கும் அவர் தலைமையேற்றுள்ள சுற்றுலா, கலை, பண்பாட்டுத்துறை அமைச்சுக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.








