குவாந்தான், ஜனவரி.05-
கடந்த சனிக்கிழமை, மெந்தகாப் பகுதியில் உள்ள கடை ஒன்றில், போதைப் பொருள் பயன்படுத்தியதாக, சந்தேகத்தின் பேரில் போலீஸ் படையைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாலை 2.15 மணியளவில் நடத்தப்பட்ட இந்தச் சோதனை நடவடிக்கையின் போது, 20 முதல் 40 வயதுடைய அந்த 7 பேர் கைது செய்யப்பட்டதாக, பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஶ்ரீ யஹாயா ஒத்மான் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் அனைவரும் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் யஹாயா ஒத்மான் குறிப்பிட்டுள்ளார்.
இன்ஸ்பெக்டர் பதவி வகிக்கும் இரண்டு அதிகாரிகளோடு, கார்பரல், லான்ஸ் கார்பரல் பதவிகளில் உள்ள ஐந்து போலீஸ்காரர்கள் இந்நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
மேலும், அங்கு, இரண்டு தாய்லாந்து பெண்களும், ஓர் உள்ளூர் ஆடவரும் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.








