தபுங் ஹாஜி யாத்ரீகர்கள் நிதி வாரியம் தொடர்பான அரச விசாரணை அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படுவதற்கு முன்பே பொதுமக்களுக்கு வெளியிடப்பட்ட விதம் குறித்து எதிர்க்கட்சிகளின் தலைமை ஒருங்கிணைப்பாளர் டத்தோ ஸ்ரீ தக்கியுடீன் ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்.சி.ஐ அறிக்கைகள் பொதுவாக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே, குறிப்பிட்ட தடைக்கால விதிகளின் கீழ் பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்றும் கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்துள்ளார்.
என்றாலும், தபுங் ஹாஜி ஆர்.சி.ஐ அறிக்கை விவகாரத்தில், அது நெகரி செம்பிலான் மாநிலத் தேர்தல் நடைபெற்ற காலகட்டத்திலேயே பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டது என்றும், அதன் பின்னரே அது மக்களவைக்கு கொண்டுவரப்பட்டது என்றும் தக்கியுடீன் ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில், பிரதமர் இந்த அறிக்கையை நேரடியாக ஆதரித்து விளக்கமளிக்க முடியாத நிலையில், இந்த விவகாரத்தை மக்களவைக்குள் விவாதிப்பதற்கும், வெளியே விவாதிப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது தெளிவாகிறது என்று தக்கியுடீன் ஹாசன் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தபுங் ஹாஜி வைப்பாளர்களின் நலனையும், நாட்டின் நிதி நிர்வாகத்தின் நம்பகத்தன்மையையும் கருத்தில் கொண்டு, மக்களவை என்பது அமைச்சர்கள் ஒருதலைப்பட்சமாக விளக்கம் அளிக்கும் இடமாக மட்டுமே இருக்கக் கூடாது என்றும் தக்கியுடீன் ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, நாடாளுமன்ற நடைபெற்ற இன்றைய சிறப்புக் கூட்டத்தில், உடல்நலக்குறைவு காரணமாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பங்கேற்காததால், விவாதத்தை ஒத்தி வைக்குமாறு எதிர்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து, பெரும்பாலான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.








