கோலாலம்பூர், அக்டோபர்.18-
இந்தியர்களின் உருமாற்றுப் பிரிவான மித்ராவிற்குத் தலைமையேற்று இருக்கும் பத்து எம்.பி. P.பிரபாகரனிடமிருந்து அதன் தலைமைப் பொறுப்பையும், அனைத்துப் பணிகளையும் தாம் எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுவதை தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் வன்மையாக மறுத்தார்.
அவ்வாறு கூறப்படுவதில் அடிப்படை உண்மையில்லை என்று டத்தோ ஶ்ரீ ரமணன் விளக்கினார்.
மித்ராவிற்கு தலைமையேற்று இருக்கும் பிரபாகரனுக்கு உதவும் வகையில் அமலாக்க ஒருங்கிணைப்புப் பணிகளுக்குப் பொறுப்பேற்று, அவற்றை கண்காணிக்கும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமக்குப் பணித்துள்ளாரே தவிர பிரபாகரனிடமிருந்து தலைமைப் பொறுப்பை தாம் பறித்துக் கொள்ளவில்லை என்று சுங்கை பூலோ எம்.பி.யான டத்தோ ஶ்ரீ ரமணன் தெளிவுபடுத்தியுள்ளார்.
பிரபாகரனுடன் தாம் இன்னமும் தொடர்பில் இருப்பதாகவும், இப்போது கூட அவரைத் தாம் சந்தித்தாகவும், எங்களுக்குள் எந்தவொரு கருத்து வேறுபாடோ அல்லது நெருக்கடியோ இருந்ததில்லை என்று டத்தோ ஶ்ரீ ரமணன் விளக்கினார்.