இந்தியர்கள் தாங்கள் பாதிக்கப்பட்டவர்களாகச் சித்தரிக்கப்படுவதாகவும், மலாய்க்காரர்கள் தங்களின் அதிகாரத்தை இழப்பதாகவும் கூறி இனங்களுக்கிடையே அச்சத்தையும் பிளவையும் ஏற்படுத்தும் முயற்சிகள் தவிர்க்கப்பட வேண்டும் என சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை கிள்ளான் டத்தாரானில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில அளவிலான தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
பல இன மக்கள் வாழும் சிலாங்கூர் மாநிலத்தில், இந்தியர்கள் உட்பட அனைத்து இன மக்களின் கண்ணியமும் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு சமூகத்தினருக்கும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில், இன, மத வேறுபாடுகளைப் பயன்படுத்தி மக்களிடையே பாதுகாப்பற்ற உணர்வையும் பிளவையும் உருவாக்கும் தீவிரவாதக் குழுக்களுக்கு இடமளிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
"குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் கலங்கி நின்ற அர்ஜுனனுக்கு, 'எத்தகைய சூழலிலும் சத்தியத்தின் பக்கமே உறுதியாக நிற்க வேண்டும்' என பகவான் கிருஷ்ணர் வழங்கிய காலத்தால் அழியாத உபதேசத்தை மந்திரி பெசார் அமிருடின் நினைவுகூர்ந்தார். அதே தர்மத்தின் வழியில் நின்று, சிலாங்கூர் மாநிலத்தின் பல்லின மற்றும் பல்மத நல்லிணக்கத்தைத் தொடர்ந்து பாதுகாப்பதில் மாநில அரசு எள்ளளவும் பின்வாங்காது உறுதிபூண்டுள்ளதாக அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், அனைத்து இனங்களையும் மதங்களையும் சேர்ந்த மக்களின் மாண்பை உயர்த்துவதுடன், நாட்டின் அரசியலமைப்பையும் தேசிய நிறுவனங்களையும் மதித்துப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.

இதனிடைய இந்நிகழ்வில் உரையாற்றிய கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ், மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில் சிலாங்கூர் மாநிலம், இந்தியர்கள் நலன் சார்ந்த விவகாரங்களை முன்னெடுப்பதில் ஒரு முன்னுதாரண மாநிலமாக திகழ்கிறது என்றார்.
மழையையும் பொருட்படுத்தாமல் அதிகமானோர் திரண்ட இந்த தீபாவளி கொண்டாட்ட பொது உபசரிப்பில் அறுசுவை உணவு வகைகள் பரிமாறப்பட்டதுடன் கலை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது, வருகையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.








