சுங்கை பட்டாணி, ஆகஸ்ட்.13-
கெடா, சுங்கை பட்டாணியில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் பகடி வதை என்ற பேரில் 13 வயதுடைய சக மாணவியைக் கைகால்களைக் கட்டி, காயப்படுத்தி, பள்ளியின் பெண்கள் கழிப்பறையில் அடைத்து வைத்திருந்ததாக இரு இந்திய மாணவிகள் சுங்கை பட்டாணி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
முதலாம் படிவத்தைச் சேர்ந்த 13 வயதுடைய அந்த இரு இந்திய மாணவிகள், மாஜிஸ்திரேட் முகமட் அஸ்லான் பஸ்ரி முன்னிலையில் நிறுத்தப்பட்டு அந்த மாணவிகளுக்கு எதிரானக் குற்றச்சாட்டு, மொழிப் பெயர்ப்பாளரின் உதவியுடன் தமிழில் வாசிக்கப்பட்டது.
அவ்விரு மாணவிகளும் கடந்த ஜுலை 14 ஆம் தேதி மாலை 6.40 மணியளவில் ஆறாம் படிவ மாணவர்களுக்கான பள்ளிக் கட்டடத் தொகுதியில் உள்ள பெண்கள் கழிப்பறையில் இந்தக் குற்றத்தைப் புரிந்ததாக அவர்களுக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு சிறை அல்லது 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 323 பிரிவின் கீழ் அந்த இரு மாணவிகளும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
எனினும் அந்த இரு மாணவிகளும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதால் ஒரு நபர் உத்தரவாதத்துடன் அவர்களைத் தலா 2 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.
சம்பவம் நிகழ்ந்த அன்று மாணவர்கள் அனைவரும் பள்ளியை விட்டுப் புறப்பட்ட நிலையில் தனது மகள் காணாதது குறித்து பள்ளியின் ஆசிரியர் ஒருவரின் உதவியுடன் மாது ஒருவர் பள்ளி வகுப்பறைகளில் தேடிய போது, தனது மகள் கழிப்றையில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானர். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் புகார் செய்ததாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.








