ஜோகூர் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் கூட்டணிக்கு மக்கள் மீண்டும் ஆதரவு வழங்கி வெற்றி பெறச் செய்வார்களேயானால், அமையவிருக்கும் புதிய மாநில அரசு, புத்ராஜெயாவில் உள்ள மத்திய அரசுடன் முழுமையாக இணைந்து செயல்படுவதை தான் உறுதி செய்யப்போவதாகத் துணைப் பிரதமரும் பாரிசான் நேஷனல் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
இன்று பொந்தியான் மாரா ஜூனியர் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கெமாஸ் பணியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் பேசிய அவர், வலுவான அரசியல் நிலைத்தன்மைக்கு மத்திய-மாநில அரசுகளுக்கிடையிலான நல்லுறவு அவசியம் என்றும், மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்திற்குச் சவால் விடும் நோக்கம் பாரிசான் நேஷனல் கூட்டணிக்கு என்றும் இருந்ததில்லை என்றும் குறிப்பிட்டார்.
மத்தியில் உள்ள அதே கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே இணக்கமான சூழல் ஏற்படும் என்று கூறி, சில தரப்பினர் அரசியல் ஆதாயத்திற்காகப் பரப்பும் பிரச்சாரங்களை வாக்காளர்கள் நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார். "நாமும் அதே மத்திய அரசாங்கக் கூட்டணியில்தான் அங்கம் வகிக்கிறோம்" என்று அவர் சுட்டிக்காட்டினார்.








