கோலாலம்பூர், அக்டோபர்.08-
இஸ்ரேலியப் படைகளால் விடுவிக்கப்பட்ட குளோபல் சுமுட் ஃபிளொடில்லாவைச் சேர்ந்த 23 மலேசியர்கள், நேற்று செவ்வாய்கிழமை இரவு பாதுகாப்பாக நாடு திரும்பினர்.
கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி, துருக்கியின் இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இக்குழுவினருடன் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம், துபாய் வழியாக நேற்று இரவு சுமார் 10 மணியளவில் கோலாலம்பூர் விமான நிலையத்தை வந்தடைந்தது.
இஸ்ரேலில் சந்தித்த சவால்களையும் மீறி மகிழ்ச்சியுடன் காணப்பட்ட தன்னார்வலர்களுக்கு, விமான நிலையத்தில் காத்திருந்த அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
அதே வேளையில், அவர்களை வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான், தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் வரவேற்றனர்.
பின்னர், விமான நிலைய வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் பேசிய வெளியுறவு அமைச்சர் முகமட் ஹசான், 23 மலேசியர்களையும் விடுவிக்க துருக்கி அரசுடன் உயர்மட்ட தூதரக பேச்சுவார்த்தைகள் நடத்திய பிரதமர் அன்வாருக்கு நன்றி தெரிவித்தார்.








