கோலாலம்பூர், டிசம்பர்.08-
மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, நிறைவேற்றப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோ சட்டத் திருத்த மசோதா, நாட்டில் உள்ள 9.6 மில்லியன் தொழிலாளர்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு அனுகூலுங்களை வழங்க வல்லதாகும்.
மனித வள அமைச்சின் மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சட்டத்திருத்த மசோதா, நாட்டின் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்தவும், தற்போதைய தொழிலாளர் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப மேலும் விரிவானதாகவும், உள்ளடக்கியிருப்பதாக மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

சொக்சோ சட்டத்தின் கீழ் வாரத்தில் 7 நாட்களுக்கும் 24 மணி நேர பாதுகாப்புச் சலுகையை வழங்கக்கூடிய இந்தச் சட்டத் திருத்த மசோதா, தொழிலாளர்களுக்கு வேலை நேரத்திற்கு அப்பாற்பட்ட நேரங்களிலும், இடங்களிலும் நிகழும் விபத்துக்களுக்கு விரிவான பாதுகாப்பை வழங்குகிறது என்று அமைச்சர் ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.
தவிர, இந்தச் சட்டத் திருத்த மசோதா, இன்றையப் பணி முறைகளுக்கு ஏற்புடையதாகும் என்பதுடன் நெகிழ்வான வேலை முறையை அடிப்படையாகக் கொண்டதாகும்.
வாரத்தில் 7 நாட்களுக்கும் 24 மணி நேரப் பாதுகாப்புச் சலுகை என்ற இந்தத் திட்டத்தை அமல்படுத்துவது முலம் நாட்டில் முறைசாரா தொழில் துறைகளைச் சேர்ந்த 9.6 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வல்லதாகும் ஸ்டீவன் சிம் சுட்டிக் காட்டினார்.
மேலும் தொழிலாளர்களுக்கு வேலை நேரத்திற்கு அப்பாற்பட்டு நிகழக்கூடிய விபத்து தொடர்பான ஆயிரக்கணக்கான இழப்பீட்டு கோரிக்கைகளில் சிக்கலையும் இந்தச் சட்டத் திருத்த மசோதா, தீர்க்க வல்லதாகும் என்று அமைச்சர் ஸிடீவன் சிம் விளக்கினார்.
தவிர, சொக்சோ குழும கிளினிக்குகள் அல்லது அரசாங்க மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை, தற்காலிக இயலாமைப் பலன்களான விபத்தினால் தற்காலிகமாக வேலை செய்ய முடியாத நிலையில், வருமான இழப்பீட்டுக்கான நிதி உதவி, நிரந்தர இயலாமை பலன்களாக நிரந்தர ஊனம் ஏற்படும் பட்சத்தில், அதற்கேற்ப இழப்பீடு முதலியவை வழங்கப்படும்.
மேலும் சந்தாதாரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நிதி உதவி, இறுதிச் சடங்கு செலவுகளுக்கான உதவி மற்றும் தொழில்சார் புனர்வாழ்வு வசதிகள், அத்துடன் உயிரிழந்த அல்லது நிரந்தரமாக ஊனமுற்ற தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான கல்வி நிதி முதலிய உதவிகளை வழங்க இந்தச் சட்டத்திருத்த மசோதா வகை செய்வதாக ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.








