பெக்கான், ஜனவரி.18-
பெக்கான் மாவட்ட மலேசியப் பொதுத் தற்காப்புப் படை, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 1,500 பல்வேறு வகை பாம்புகளைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 800 பாம்புகள் பிடிபட்ட நிலையில், அதில் 180 கிலோ எடை கொண்ட பிரமாண்ட மலைப்பாம்பும் அடங்கும் என பெக்கான் மாவட்ட பொதுத் தற்காப்புப் படை கேப்டன் அஹ்மாட் அஸ்மி நஃபியா தெரிவித்தார்.
குடியிருப்புப் பகுதிகளிலும் கால்நடைப் பண்ணைகளிலும் புகுந்து அச்சுறுத்தல் ஏற்படுத்திய ராஜநாகம், கட்டுவிரியன் போன்ற நச்சுத்தன்மை கொண்ட பாம்புகளும் இதில் அடங்கும். நீர்நிலைகளில் நீர் மட்டம் உயருவதால் பாம்புகள் உணவிற்காக ஊருக்குள் வரக்கூடும் என்பதால், பாம்புகளைக் கண்டால் சுயமாகப் பிடிக்க முயலாமல் உடனடியாக அதிகாரிகளை அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.








