காஜாங்,ஜன.12
சர்ச்சைக்குரிய 1MDB நிறுவனத்துடன் தொடர்புப்படுத்தி, தயாரிக்கப்பட்ட Man On the Run எனும் ஆவணப்படத்தை NETFLIX திரையீட்டு வரிசையிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனத்தை அரசாங்கம் கேட்டுக்கொள்ள வேண்டும் என முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் வழக்கறிஞர் விடுத்துள்ள கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கையை சம்பந்தப்பட்ட நிறுவனம் பரிசீலிக்கும் என்று இன்று காஜாங்கில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ அன்வார் இதனை தெரிவித்தார்.
நஜீப்பிற்கு எதிராக 1MDB வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அந்த முன்னாள் பிரதமர் மற்றும் 1MDB நிறுவனம் சம்பந்தப்பட்ட ஆவணப்படம் திரையிடப்படுமானால் அது வழக்கை வெகுவாக பாதிக்கக்கூடும்.
எனவே அந்த ஆவணப்படம் திரையிடப்படுவதிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்று நஜீப்பின் வழக்கறிஞர் நிறுவனமான தெதுவான் ஷஃபி அண்ட் Co. அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது.








