தமிழ்ப்பள்ளிகளே நமது தேர்வு என்பது நமது விருப்பமாக முதன்மை தேர்வாக இருந்தாலும் அந்த விருப்பத்தை பூர்த்தி செய்வதற்கு சமுதாயத்தின் பங்களிப்பும் அவசியமாகும் என்று தேசிய நில நிதி கூட்டுறவுச சங்கத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் டத்தோ பா. சகாதேவன் கேட்டுக்கொண்டார்.
ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியையும் பாதுகாப்பதற்கு அந்தந்த வட்டாரத்தில் உள்ள இந்தியர்கள் துணை நிற்பார்களேயானால் கற்றல், கற்பித்தல் தரம் உயர்வு மட்டுமின்றி பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் பெரும் துணையாக இருக்க முடியும் என்று டத்தோ சகாதேவன் வலியுறுத்தினார்.
கெடா, கூலிம், புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மாணவர் மேம்பாட்டிற்காக நிதி திரட்டும் விருந்தோம்பல் நிகழ்வு அண்மையில் கூலிம் பாயா பெசார் ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்விற்கு சிறப்பு வருகையாளராக கலந்து கொண்டு உரையாற்றிய டத்தோ பா. சகாதேவன், பள்ளியை பாதுகாப்பதற்கு பெற்றோர்கள் ஆற்றக்கூடிய பங்களிப்பை விளக்கினார்.
இப் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் போக்குவரத்துச் செலவுகளை மக்கள் வழங்கும் நன்கொடையில் மூலம் சமாளித்து வருவதாக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஏழுமலை தமது உரையில் தெரிவித்தார்.
மாணவர்கள் குறைந்து கொண்டு வரும் தமிழ்ப்பள்ளிகளின் வரிசையில் ஒன்றாக விளங்கி வரும் புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி மூடுவிழா கண்டு விடக்கூடாது என்பதற்காக தோட்டத்திலிருந்து ஒரே ஒரு மாணவர் மட்டுமே இப்பள்ளிக்கு வருகின்ற நிலையில் மற்ற அனைத்து மாணவர்களும் அருகாமையில் பாயா பெசார் வட்டாரத்திலிருந்து கொண்டு வரப்படுவதாக குறிப்பிட்டார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏற்பாடு செய்யப்பட்ட நிதி திரட்டும் நிகழ்வில் கிடைத்த தொகையைக் கொண்டு இன்று வரை புக்கிட் செலாரோங் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கும் அவர்களின் புறப்பாட நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பொழுது அத்தொகை குறைந்து விட்டதால் நிதி திரட்டும் விருந்தோம்பல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏழுமலை கூறினார்.
பள்ளி தலைமையாசிரியர் ஜூலியானா செல்வநாயகம் தலைமையில் இப்பொழுது 80 மாணவர்கள் புக்கிட் செலாரோங் தமிழ்ப்பள்ளியில் பயின்று வருவதையும் ஏழுமலை தமது உரையில் சுட்டிக்காட்டினார். 







