கோலாலம்பூர், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து, பினாங்கில் உள்ள இரு தனியார் அள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் மின் அஞ்சல் வழி அனுப்பப்பட்டுள்ளது என தீமூர் லாவுட் மாவட்டக் காவல்துறையின் இடைக்காலத் தலைவர் சுபெரிதென்டன் வி சரவணன் கூறினார்.
அப்பள்ளிகளில் வெடிகுண்டு புதைக்கப்பட்டு விட்டதாகக் குறிப்பிட்டு இரு பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த மின்னஞ்சலின்படி, அனுப்பியவர் அதிகமான வாழ்க்கைப் பிரச்சனைகளைச் சந்திக்கிறதாகவும், அவரைச் சுற்றி இருப்பவர்கள் தன்னை வெறுப்பதாகவும் சிறு வயதில் இருந்தே அவர் தமது தந்தையால் கற்பழிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வெடிகுண்டு
பினாங்கு காவல் படைத் தலைமையகத்தின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவும் K-9 பிரிவும் இரு பள்ளிகளுக்கும் சென்றுள்ளதாகவும் சந்தேகப்படும் படியாக எதுவும் இல்லை எனவும் சரவணன் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் தீயணைப்புப் படையும் தயாராக இருந்ததாக கூறும் அவர், அந்த மின்னஞ்சல் குறித்தும் அனுப்பியவர் தகவல் குறித்தும் தெரிந்து கொள்ள தொடர்பு பல்லூடக ஆணையத்திடம் உதவி கோரப்படும் என்றார்.








