கோலாலம்பூர், அக்டோபர்.22-
யுபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகள் நீக்கப்பட்டப் பின்னரும் கூட, மலேசிய கல்வி சான்றிதழான எஸ்பிஎம் தேர்வுகளின் முடிவுகள் நிலைத்தன்மையுடன் இருப்பதை அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகளின் முடிவுகள் காட்டுவதாகக் கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். யுபிஎஸ்ஆருக்கும் பிடி3க்கும் மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி அமர்வின் இறுதித் தேர்வான யுஏஎஸ்ஏ, தேர்வு வாரியத்தின் தரநிலைகளின்படி ஆசிரியர்கள் மாணவர்களின் செயல்திறனை விரிவாக மதிப்பிட உதவுகிறது என்று அவர் விளக்கினார்.
இதற்கிடையில், தொடக்கப் பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் விகிதம் 0.05 விழுக்காடாகவும், இடைநிலைப் பள்ளிகளில் 0.59% விழுக்காடாகவும் குறைந்திருப்பதுடன், அமைச்சு பல்வேறு விரிவான உதவிகளையும் திட்டங்களையும் அமல்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் SiPKPM அமைப்பு, இடைநிற்றல் அபாயம் உள்ள மாணவர்களை அடையாளம் கண்டு, இலக்கு சார்ந்த உதவிகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது என்றார்.








