சிப்பாங், நவம்பர்.25-
சிலாங்கூர், டெங்கில், ஜாலான் பந்திங், பத்து 8, தெபி ஜாலான் என்ற இடத்தில் நேற்று திங்கட்கிழமை, இரவு 8.10 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்ட கொள்ளைக் கும்பல் தலைவனான ஓர் இந்திய ஆடவருக்கு 19 குற்றப்பதிவுகள் இருப்பதை போலீசார் இன்று உறுதிச் செய்தனர்.
அந்த நபர், கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து வீடுகள், தொழிற்சாலைகள், கட்டமானத் தளங்களை ஆகியவற்றை இலக்காகக் கொண்டு ஒரு கும்பலாக ஆயுதமுனையில் கொள்ளையடித்து வந்துள்ளான் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்துள்ளார்.
இவன் சார்ந்து இருந்த கொள்ளைக் கும்பல், ஈவு இரக்கமின்றி மிகக் கொடூமாகச் செயல்படக்கூடியது என்று வர்ணித்த டத்தோ குமார், இந்தக் கும்பல் சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா ஆகிய மூன்று மாநிலங்களில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளது என்று இன்று சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
இக்கொள்ளையன் சுட்டு வீழ்த்தப்பட்டது மூலம் COLD 45 ரக துப்பாக்கி, Kristal வகையைச் சேர்ந்த போதைப் பொருள் மற்றும் KYNOCH ரகத்திலான 3 துப்பாக்கித் தோட்டாக்கள், Myvi ரகக் கார் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இந்தக் கும்பல் நடத்திய கொள்ளைச் சம்பவங்களில் வெட்டுக்கத்தி, துப்பாக்கி மற்றும் இரும்புத் தடிகளை ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளது. வீடுகளில் நடத்தப்பட்ட கொள்ளைச் சம்பபங்களில் அங்கு பொருத்தப்பட்ட ரகசிய கேமராக்களை உடைத்துச் சேதப்படுத்தியப் பின்னரே இக்கும்பல் தங்கள் கைவரிசையைக் காட்டி வந்துள்ளது.
இந்தக் கொள்ளைக் கும்பலில் மொத்தம் 10 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களைத் தேடும் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளதாக டத்தோ குமார் தெரிவித்தார்.
முகமூடிக் கொள்ளையர்களை அடையாளம் காணும் வகையில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் கடுங் குற்றத்தடுப்புப் பிரிவான D9 (டி நைன்) நேற்று ஜாலான் பந்திங்கில் நடத்திய சோதனையில் போலீசாரை நோக்கித் துப்பாக்கி பிரயோகம் நடத்திய அக்கொள்ளையன் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநிலத்தில் 17 குற்றச்செயல்களிலும், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்காவில் தலா ஒரு குற்றச்செயலிலும் இவன் ஈடுபட்டுள்ளான். இதன் மூலம் 2.53 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த நவம்பர் 19 ஆம் தேதி இக்கொள்ளையன் ஆஜராகாமலேயே இவன் மீது ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆயதமேந்திய கொள்ளை தொடர்பில் ஒரு குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
சிப்பாங்கைச் சேர்ந்த இவனுக்கு, ஏற்கனவே பழைய 10 குற்றப்பதிவுகள் இருப்பதையும் டத்தோ குமார் சுட்டிக் காட்டினார்.








