Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கத்தியுடன் காணப்பட்ட மாது கைது செய்யப்பட்டார்
தற்போதைய செய்திகள்

கத்தியுடன் காணப்பட்ட மாது கைது செய்யப்பட்டார்

Share:

காஜாங், ஆகஸ்ட்.13-

மோட்டார் சைக்கிளைக் காரினால் மோதித் தள்ளியதாக நம்பப்படும் மாது ஒருவர், தன்னை அணுகியவர்களைக் கையில் கத்தியுடன் ஆவேசமாக நடந்து கொண்டது, காஜாங் நகரில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விபத்துக்கு பின்னர் காரை விட்டு வெளியேறுமாறு அந்த மாதுவை பொதுமக்கள் அணுகிய போது, அந்த மாது ஒருவரை கத்தியால் குத்தியதாக நம்பப்படுகிறது. இதனால், வெள்ளை நிற காருக்குள் அமர்ந்திருந்த அந்த மாதுவின் அருகில் நெருங்குவதற்கு மக்கள் பெரும் அச்சம் அடைந்தனர்.

சிலர் அந்த மாதுவின் காரை எட்டி உதைத்த போது, ஆத்திரமுற்ற அந்த சீன மாது, மீண்டும் கத்தியை ஏந்திக் கொண்டு சிலரைத் துரத்த முற்பட்டார்.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மீண்டும் காருக்குள் அமர்ந்து கொண்ட அந்த மாது, காரின் அடியில் மோட்டார் சைக்கிள் சிக்கிக் கொண்டதால் அவரால் அங்கிருந்து தப்பிக்க முடியவில்லை.

இந்நிலையில் அவ்விடத்திற்கு விரைந்த மோட்டார் சைக்கிள் ரோந்து போலீசார் அந்த மாதுவை லாவகமாகப் பிடித்து கைவிலங்கிட்டு சாலையில் அமர வைத்தனர். ரோந்து போலீஸ் கார் வரும் வரை சாலையிலேயே உட்கார வைக்கப்பட்ட 40 வயது மதிக்கத்தக்க அந்த மாது, தன்னை விடுவிக்குமாறு கத்தி பெரும் கூச்சலிட்டது பெரும் கவன ஈர்ப்பாக மாறியது.

அந்த மாதுவின் கத்தி வெட்டுத் தாக்குதலுக்கு ஆளான நபர், அருகில் உள்ள கிளினிக்கிற்குக் கொண்டுச் செல்லப்பட்டார். இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

Related News