கோலாலம்பூர், ஜூலை.15-
ஜசெக.வின் முன்னாள் நாடாளுமன்ற கொறடாவும், போராட்டவாதியுமான மறைந்த P. பட்டுவின் 30 ஆம் ஆண்டு நினைவு நாள் கடந்த ஜுலை 12 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.
மலேசிய மூத்த அரசியல்வாதியாக, மனித உரிமைப் போராட்டவாதியாக தமிழ், மலாய், ஆங்கிலம், சீனம் உட்பட பன்மொழிகளின் திறன் பெற்றவராக பார்க்கப்பட்ட ஈப்போ சிறுத்தை என்று வர்ணிக்கப்பட்ட P. பட்டு மறைந்து 30 ஆண்டுகள் ஆகின்றன.
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டமான இசாவின் ( ISA ) வின் கீழ் இரண்டு முறை கைது செய்யப்பட்டு, தைப்பிங், கமுண்டிங் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவரான முன்னாள் மெங்கலம்பு நாடாளுமன்ற உறுப்பினரான P. பட்டு, மலேசிய இந்தியர்களின் உரிமைகளுக்காகப் போராடிய சிம்மக் குரலோன் ஆவார்.
மலேசிய நாடாளுமன்றத்தில் பலருக்குச் சிம்ம சொப்பனமாய் விளங்கியவர் மலேசிய முற்போக்குக் கட்சியின் தலைவர்களான ஈப்போ D. R. சீனிவாசகம் சகோதரர்களுக்குப் பின்னர் நாடாளுமன்ற மக்களவையில் சொல்லின் வீரனாகப் பார்க்கப்பட்டவர் P. பட்டு.
ஜசெக.வின் மாதாந்திர சஞ்சிகையான ராக்கெட்டின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றிய பட்டு, பினாங்கு பாகான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது, கடந்த 1995 ஆம் ஆண்டு ஜுலை 12 ஆம் தேதி தமது 48 ஆவது வயதில் மாரடைப்பினால் காலமானார்.
ஜசெக.வின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கின் வலது கரமாக விளங்கிய P. பட்டுவைப் போன்ற ஒரு துணிச்சல் மிக்க அரசியவாதி விட்டுச் சென்ற இடம், மலேசிய அரசியல் வானில் இன்னமும் வெற்று இடமாகவே உள்ளது என்பதே சோகம்.








