ஷா ஆலாம், அக்டோபர்.24-
சர்ச்சைக்குரிய அரசியல் வலைப்பதிவாளரான பாபாகோமோ என்ற வான் அஸ்ரி வான் டெரிசுக்கு எதிராக நாடு தழுவிய நிலையில், பிகேஆர் கட்சியின் இளைஞர் பிரிவு 14 போலீஸ் புகார்களைச் செய்துள்ளது.
933 என்ற டிக் டாக் கணக்கில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமை, அவமதித்து, அவதூறு தன்மையில் பேசியதாகக் கூறி, பாபாகோமோவிற்கு எதிராக பிகேஆர் இளைஞர் பிரிவு, போலீஸ் புகார் செய்து இருப்பதாக அதன் அணி திரட்டல் பிரிவின் தலைவர் பாரிகூல் ஸாமான் தெரிவித்துள்ளார்.
பாபாகோமோவிற்கு எதிராக 14 மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது என்று ஷா ஆலாம் போலீஸ் தலைமையகத்தில் புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பாரிகூல் ஸாமான் இவ்வாறு குறிப்பிட்டார்.
பாபாகோமோவிற்கு எதிராக போலீஸ் துறையில் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைத் தாங்கள் பொறுத்திருந்து பார்க்கப் போதாக அவர் கூறினார்.
பிரதமருக்கு எதிராக பாபாகோமோவின் குற்றச்சாட்டுகள், கடுமையானதாகவும், தீங்கிழைக்கும் நோக்கிலும் உள்ளன என்று பாரிகூல் ஸாமான் தெரிவித்தார்.








