ஷா ஆலாம், பிப்ரவரி.12-
சிலாங்கூர், ரவாங்கில் அனுமதியின்றி கட்டப்பட்டதாகக் கூறப்படும் கோயில் ஒன்றை இடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட தமீம் தஸ்ரி மற்றும் மூன்று நபர்களைத் தடுப்புக் காவலில் வைக்க போலீசார் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.
முதலில் செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இவர்களுக்கு இரண்டு நாள் தடுப்புக் காவல் வழங்கி உத்தரவிட்டது. எனினும், அவர்களது வழக்கறிஞர் அய்டில் காலிட் உடனடியாக ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வழங்கிய தடுப்புக் காவல் உத்தரவை ரத்து செய்ததோடு, நால்வரையும் உடனடியாக விடுவிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது.
ரவாங்கில் உள்ள ஒரு கோயிலின் ஒரு பகுதியை இடித்ததாகக் கூறி இவர்கள் நால்வரும் நேற்று கைது செய்யப்பட்டனர். இதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு Backhoe இயந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அத்துமீறி நுழைதல், வழிபாட்டுத் தலத்திற்குச் சேதம் விளைவித்தல் மற்றும் அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில் "சட்டவிரோத" வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராகப் பேரணி நடத்த முயன்றவர்களில் தமீம் தஹ்ரியும் ஒருவர். இவர் சர்ச்சைக்குரிய மதப்போதகர் ஸம்ரி வினோத்துடன் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.








