புத்ராஜெயா, ஆகஸ்ட்.21-
மாணவர்கள் நலன் சார்ந்த தங்களின் 6 கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் அல்லது கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகுங்கள் என்று கோரி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக்கிற்கு எதிராக இன்று அமைதி மறியல் நடைபெற்றது.
புத்ராஜெயாவில் கல்வி அமைச்சின் கட்டடம் முன் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்ற இந்த அமைதி மறியலில் தாங்கள் முன்வைத்துள்ள 6 கோரிக்கைகளை 30 நாட்களுக்குள் அமைச்சர் ஃபாட்லீனா நிறைவேற்ற வேண்டும் என்று தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அவ்வாறு நிறைவேற்றத் தவறினால், கல்வி அமைச்சர் பதவியிலிருந்து ஃபாட்லீனா சீடேக் உடனடியாக விலக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
பகடிவதைக்கு ஆளான முதலாம் படிவ மாணவி ஸாரா கைரினா விவகாரம் உட்பட கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் மாணவர் நலன், அவர்களின் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை கல்வி அமைச்சர் என்ற முறையில் ஃபாட்லீனா சீடேக் அமல்படுத்தத் தவறிவிட்டார் என்று அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
‘உண்டுர்ஃபாட்லீனா’ என்ற வாசகம் உட்பட பல்வேறு சுலோகங்களைத் தாங்கிய அட்டைகளையும், பதாகைகளையும் ஏந்திய நிலையில் நடைபெற்ற இந்த அமைதி மறியலை கபுங்கான் மஹாசிஸ்வா இஸ்லாம் சே-மலேசியா மற்றும் ஹிம்புனான் அட்வோகாசி ரக்யாட் மலேசியா ஆகிய இரு அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன. சுமார் 20 க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
அமைச்சர் ஃபாட்லீனாவிடம் நேரடியாகக் குறிப்பாணையை வழங்குவதே இந்த அமைதி மறியலில் நோக்கமாகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் அந்த அமைப்புகளின் பொறுப்பாளர்கள் வழங்கிய மகஜரை அமைச்சர் ஃபாட்லீனா சார்பில் கல்வி அமைச்சின் அதிகாரி ஃபாயிஸ் ரஷிட் பெற்றுக் கொண்டார்.








