ஜார்ஜடவுன், நவம்பர்.10-
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில் போலீசார் மேற்கொண்ட இரண்டு சோதனை நடவடிக்கைகளில் ஒரு தம்பதியர் மற்றும் 6 ஆடவர்களைக் கைது செய்தது மூலம் 8.67 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 247.7 கிலோ எடை கொண்ட கஞ்சாப் பூக்களைப் பறிமுதல் செய்தனர்.
கடந்த நவம்பர் 4 ஆம் தேதி இரவு 10 மணி முதல் மறுநாள் மாலை 6 மணி வரை பினாங்கு போதைப் பொருள் துடைத்தொழிப்பு போலீசார் மேற்கொண்ட இந்தச் சோதனைகளில் இந்த எண்மர் பிடிபட்டனர்.
பிடிபட்ட எண்மரில் பாகிஸ்தானைப் பூர்வீகமாக கொண்ட ஒரு பிரிட்டன் பிரஜை மற்றும் தாய்லாந்து பிரஜையான ஒரு பெண் ஆகியோர் அடங்குவர் என்று பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸி இஸ்மாயில் தெரிவித்தார்.
20 க்கும் 37 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த எண்மரும் போதைப் பொருள் கடத்தலில், கடந்த அக்டோபர் மாதம் முதல் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.








