கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி ஈப்போ, ஜாலான் லப்பாங்கான் தெர்பாங் சாலையில் அமைந்துள்ள மின்னியல் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் நுழைந்து பொருட்களை களவாடியதாக நம்பப்படும் ஆறு ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பல ஆயிரம் வெள்ளி மின்னியல் பொருட்கள் களவாடப்பட்டது தொடர்பில் கடந்த இரண்டு நாட்களாக போலீசார் மேற்கொண்ட "ஓப் கர்கோ சார்செம்" என்ற சோதனை நடவடிக்கையில் 27 க்கும் 47 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஆறு நபர்கள், ஈப்போ, பினாங்கு மற்றும் சிலாங்கூர் ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி யாஹாயா ஹஸ்சான் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த அன்று அந்த மின்னியல் தொழிற்சாலையின் பிரதான கதவை உடைத்துக்கொண்டு உள்ளை நுழைந்த நபர்கள், பாதுகாவலரை ஆயுதமுனையில் மடக்கி, கட்டிப்போட்டப் பின்னர் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள உலோகப் பொருட்களை களவாடிச் சென்றதாக ஏசிபி யாஹாயா குறிப்பிட்டுள்ளார். இக்கும்பல் களவாடியப் பொருட்களை போலீசார், சந்தேகப் பேர்வழிகள் ஒருவரின் உறவினருக்கு சொந்தமான பெர்ச்சாம் மில் உள்ள ஒரு வீட்டில் கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.








