சுபாங் ஜெயா பிஜேஎஸ் டோல் சாவடியில் கடந்த 4ஆம் தேதி இரவு நிகழ்ந்த விபத்தில் மாலத்தீவைச் சேர்ந்த 22 வயது மாணவி உயிரிழந்தது தொடர்பில் விபத்தில் தொடர்புடைய இ-ஹெய்லிங் ஓட்டுநர் மெத்தாம்பெத்தமின் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது சிறுநீர் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது என்று சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.
இரவு 8.48 மணியளவில் பூச்சோங் நோக்கிச் செல்லும் டோல் சாவடியில் புரோட்டோன் S70 காரும் பெரோடுவா அதிவா காரும் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது. அதிவா காரில் மாலத்தீவைச் சேர்ந்த இரு 22 வயது மாணவிகள் பயணம் செய்தனர்.
மோதலின் வேகத்தில் அதிவா கார் சுழன்று கவிழ்ந்ததில் ஒரு மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு மாணவி சொற்ப காயங்களுக்கு ஆளானார். உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக செர்டாங் மருத்துவமனையில் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று வான் அஸ்லான் குறிப்பிட்டார்.
அதிவா ஓட்டுநரான 37 வயது ஆடவருக்கு நான்கு நாள் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டப் பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.








