பொதுமக்களின் அன்றாட குடிநீர் சுத்திகரிப்பு செயல்முறையின் போது கிடைக்கப் பெறும் நீர் சுத்திகரிப்பு எச்சங்களை, சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானச் செங்கல்களாக மறுசுழற்சி செய்து சாதனை படைத்து வருகிறது ஆலாம் அலிரான் குவாலிட்டி நிறுவனம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை முதன்மை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு "டபிள்யூ.டி.ஆர் எஸ்.டபிள்யூ204 ஸ்லட்ஜ்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் திட்ட மேலாளர் டி.எஸ். கார்த்திகேயேன் விளக்குகையில், "டபிள்யூ.டி.ஆர்" என்பது "வாட்டர் ட்ரீட்மென்ட் ரெசிடுவல்" எனப்படும் நீர் சுத்திகரிப்பு எச்சங்களைக் குறிக்கும் என்றார்.
கடந்த 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி, பினாங்கு சுங்கை டுவாவில் அமைந்துள்ள பினாங்கு குடிநீர் விநியோக கழகமான பி.பி.ஏ.பி.பி கீழ் இத்திட்டத்தைப் பினாங்கு மாநில முதலமைச்சர் மாண்புமிகு சாவ் கோன் இயோ அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். இத்திட்டம் பினாங்கு மாநில குடிநீர் விநியோக கழகத்துடன் 15 ஆண்டுகள் குத்தகையின் அடிப்படையில் இயங்கி வருகிறது. மலேசியாவிலேயே முதன்முறையாக, குடிநீர் சுத்திகரிப்பு எச்சங்களை மூலப்பொருளாகப் பயன்படுத்தி கட்டுமான செங்கல்கள் தயாரிக்கப்படுவது பினாங்கு மாநிலத்திற்கும், ஆலாம் அலிரான் குவாலிட்டி நிறுவனத்தின் முயற்சிக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
மலேசியாவின் பல்வேறு அரசு மற்றும் தனியார் நீர்வளத் துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், குறிப்பாக பி.ஏ.ஏ.பி, பெட்ரா, ஸ்பான், பி.பி.ஏ.பி.பி மற்றும் ஜே.ஏ.எஸ் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள், ஆலாம் அலிரான் குவாலிட்டி நிறுவனத்தின் இரண்டு திட்டத் தளமான சுங்கை டுவா மற்றும் புக்கிட் மின்யாக் தொழில்நுட்பப் பார்வை மேற்கொள்வதற்காக பலரும் வருகைப் புரிந்தனர்.
இத்திட்டத்தின் தொழில்நுட்பச் செயல்முறை இரு முக்கியப் பிரிவுகளாக நடைபெறுகிறது. பினாங்கு குடிநீர் விநியோக கழகமான பி.பி.ஏ.பி.பி அனுப்பும் நீரிலிருந்து, சுங்கை டுவாவில் அமைந்துள்ள 'சுங்கை துவா டிவாட்டரிங் பிளான்ட்' தளத்தில் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கழிவு எச்சங்கள் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட நீர் மீண்டும் பி.பி.ஏ.பி.பி-யிடம் ஒப்படைக்கப்படுகிறது.
முன்பெல்லாம் இவ்வகை எச்சங்கள் ஆறுகளில் வீசப்பட்டதால் சுற்றுச்சூழல் அசுத்தமடைந்து, பல சுகாதாரப் பிரச்சினைகள் எழுந்தன. இதனைத் தடுப்பதற்காகவே பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு இத்திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது பிரித்தெடுக்கப்படும் எச்சங்கள் கடலிலோ, ஆற்றிலோ வீசப்படாமல், புக்கிட் மின்யாக் பகுதியில் அமைந்துள்ள நிறுவனத்தின் 'ஈக்கோ பிரிக் மேனுஃபேக்ச்சரிங் பிளான்ட்'-க்கு கொண்டு செல்லப்பட்டு, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தரமான கட்டுமானச் செங்கல்களாக மாற்றப்படுகின்றன என்று திட்ட மேலாளர் டி.எஸ். கார்த்திகேயன் விவரித்தார்.

ஆலாம் அலிரான் குவாலிட்டி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ பாலன் அகம்பரம் அவர்களின் முக்கிய நோக்கமே சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதாகும். தற்போது, இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் கட்டுமானச் செங்கல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி, எதிர்காலத்தில் இதே மூலப்பொருட்களைப் பயன்படுத்தி சிமெண்டு உற்பத்தி செய்யும் விரிவான திட்டமும் நிறுவனத்திடம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொழில்நுட்பப் பார்வை, மலேசியாவின் பிற நீர் விநியோக நிறுவனங்களுக்கும் நீர் சுத்திகரிப்பு எச்சங்களைச் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மறுசுழற்சி செய்வதற்கான புதிய ஊக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்வளத் துறையில் "டபிள்யூ.டி.ஆர் எஸ்.டபிள்யூ204 ஸ்லட்ஜ்" திட்டம் ஒரு வரலாற்று முன்னோடித் திட்டமாக அமையும் எனத் திட்ட மேலாளர் திஎஸ். கார்த்திகேயன் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.









