சிலாங்கூரில் ஆயுதக் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வன்முறைக் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 'வினோத் கும்பல்' உறுப்பினர்கள் 11 பேர் மீது செபாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்ட ஜி. சங்கீதன், ஏ. லாரன்ஸ், எம். புவனேஸ்வரன், ஆர். ஷெர்வின்குமார், எம். சுரேந்தர், எஸ். ஸ்ரீ தரன், பி. சர்வின், என். ஏ. ஆர். விக்னேஸ்வரன், எம். நவீந்திரன், முகம்மது வினோத் சக்திவேல் மற்றும் ஜே. எம். கிஷன் ஆகியோர் நீதிபதி ஹுஸ்னா துல்கிப்ளி முன்னிலையில் தனித்தனியாக குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது, அதனைப் புரிந்துகொண்டதாகத் தலையசைத்தனர்.
கடந்த 2024 -ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2026 -ஆம் ஆண்டு ஜூன் 27 -ஆம் தேதி வரை சிலாங்கூர் பந்தார் ரிம்பாயு, தெலுக் பங்லிமா காராங், கோலா லங்காட் பகுதிகளில் செயல்பட்ட அந்தக் கும்பலில் உறுப்பினர்களாக இருந்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இதனிடையே, இந்த வழக்கானது உயர்நீதிமன்ற அதிகார வரம்பிற்கு உட்பட்டதால், குற்ற ஒப்புதல் பதிவு செய்யப்படவில்லை.
மேலும், குற்றவியல் சட்டம் பிரிவு 130V(1)-இன் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இந்நிலையில், வழக்கின் அடுத்த விசாரணை வரும் செப்டம்பர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தப்பா சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கடந்த ஜூன் 23, 24-ஆம் தேதிகளில் நடைபெற்ற ஆப்ஸ் ராபிடோ நடவடிக்கையில் அவர்கள் 11 பேரும் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.








