ரவாங்கில் உள்ள ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரர் ஆலயத்தை இடிப்பதற்கு எதிராக செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விதித்திருந்த தடையுத்தரவை ஷா ஆலம் உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.
நீதிபதி சூரியாதி ஹாசிமா ஹாஷிம் இந்த உத்தரவை பிறப்பித்தார். இருப்பினும், இந்தத் தீர்ப்புக்கான காரணங்களை நீதிமன்றம் இன்னும் தெளிவுபடுத்தவில்லை என்று கோயில் தரப்பு வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து கோயில் நிர்வாகம் தற்போது மேல்முறையீடு செய்துள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவு வரும் வரை, கோயிலின் எஞ்சிய பகுதியை இடிக்க வேண்டாம் என நில உரிமையாளரான 'யாயாசான் குப்ரா' நிறுவனத்திற்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக, நிலத் தகராறு நிலுவையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு, கடந்த மார்ச் 13-ஆம் தேதி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கோயில் இடிப்புப் பணிகளுக்குத் தடை விதித்திருந்தது. எனினும் இந்த தடையை உயர்நீதிமன்றம் அகற்றியிருப்பது கோயில் தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.








