கோலாலம்பூர், அக்டோபர்.08-
பிரான்சைஸ் உரிமம் அடிப்படையிலான தொழில் துறைகளில் இந்திய சமுதாயத்தின் பங்கேற்பை வளப்படுத்தும் நோக்கில் “சூரியன்” எனும் திட்டத்தை பெர்னாஸ் எனப்படும் பெர்பாடனான் நேஷனல் பெர்ஹாட் இன்று அதிகாரப்பூர்வமாக தொடக்கியது.
இந்திய தொழில்முனைவர்களை வளப்படுத்தும் நோக்கில் இத்திட்டத்தில் இணையும் ஆயிரம் பங்கேற்பாளர்களுக்கு பயிற்சி, சுழல்நிதி, கடன் வசதிகள் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டம் வாயிலாக கிட்டத்தட்ட 54.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும் என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கையிலிருந்து 500 பங்கேற்பாளர்களுக்கு நூறு விழுக்காடு வேலை உத்தரவாதம் வழங்கப்படும். ஒவ்வொரு பங்கேற்பாளரும் தங்களின் திறனுக்கு ஏற்ப பொருத்தமான துறைகளில் குறைந்தபட்சம் 1,700 ரிங்கிட் முதல் 2,800 ரிங்கிட் வரை சம்பளம் பெறுவர் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.
இன்று கோலாலம்பூர் பங்சாரில் மெனாரா பெர்னாஸில் நடைபெற்ற சூரியன் திட்டத்தை அதிகாரப்பூர்மாகத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ஶ்ரீ ரமணன் மேற்கண்டவாறு கூறினார்.
இத்திட்டத்தில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை இன்று புதன்கிழமை முதல் பெர்னாஸ் அதிகாரப்பூர்வமான வலைத்தளம் மூலமாகவோ அல்லது நேரடியாக பெர்னாஸ் அலுவலகத்திலோ சமர்ப்பிக்கலாம் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.
இந்த சூரியன் திட்டம், இரண்டு ஆண்டுகள் அடிப்படையில் வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கி 2027 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை நடைபெறும். பிரான்சைஸ் உரிமம் தொடர்பான தொழில் பயிற்சி, தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துதல் மற்றும் இந்திய தொழில்முனைவர்கள் மத்தியில் பிரான்சைஸ் திட்டத்தை மேம்படுத்துதல் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் விளக்கினார்.
இந்தத் திட்டம் 18 முதல் 60 வயதுடைய மலேசிய இந்தியர்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது. தனிநபர்களாக இருந்தாலும் அல்லது நிறுவனங்களாக இருந்தாலும் அவர்களின் வணிகங்கள் ஷரியாவிற்கு இணக்கமாக அதே வேளையில் செல்லத்தக்க வணிக லைசென்ஸ் கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் இந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் விளக்கினார்.








