ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.26-
கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி ஆடவர் ஒருவரை மடக்கி, தங்களைப் போலீஸ்காரர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டு, பணம் கேட்டு அச்சுறுத்தியதாக நம்பப்படும் இரு பாதுகாவலர்கள் ஜோகூர் பாரு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
29 வயது முகமட் ஷாஃபிக் ஸாகாரியா மற்றும் முகமட் சுலைமான் அப்துல் ரஹ்மான் என்று அவ்விரு பாதுகாவலர்களும் மாஜிஸ்திரேட் நபிலா நிஸாம் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் ஜோகூர் பாரு, தாமான் கோத்தா மாசாய், ஜாலான் பெதிக் என்ற இடத்தில் இரண்டு நபர்களும் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் இருவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.








