May 5, 2026
Thisaigal NewsYouTube
அரசு சார்பு நிறுவனங்களில் ஊழலுக்குத் துணை போகும் இடைத்தரகர்களுக்கு 'செக்': எஸ்பிஆர்எம் கடும் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

அரசு சார்பு நிறுவனங்களில் ஊழலுக்குத் துணை போகும் இடைத்தரகர்களுக்கு 'செக்': எஸ்பிஆர்எம் கடும் எச்சரிக்கை

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.13-

அரசாங்க சார்பு நிறுவனங்களில் ஊழல் பரவுவதற்கு முக்கியக் காரணமாக விளங்கும் முகவர்கள், இடைத்தரகர்கள் மற்றும் செல்வாக்கு செலுத்துபவர்களை இலக்கு வைத்து இனி முழு வீச்சில் நடவடிக்கைகள் பாயும் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் அறிவித்துள்ளது.

குறிப்பாக, அரசின் கொள்முதல் ஒப்பந்தங்களைச் சுருட்டும் கும்பல்கள் மற்றும் சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர் ஆள்சேர்ப்பு போன்ற விவகாரங்களில் ஈடுபடுவோர் மீது ஆணையத்தின் கவனம் தீவிரமாக இருக்கும் என எஸ்பிஆர்எம் செயலாக்கத் துணைத் தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் குசைரி யஹாயா தெரிவித்தார்.

இதுவரை பின்பற்றி வந்த அணுகுமுறையை மாற்றி, இந்த ஆண்டு ஊழலுக்குத் தூண்டுதலாக இருக்கும் இடைத்தரகர்களைக் குறி வைக்கப் போவதாக அஹ்மாட் குசைரி குறிப்பிட்டார். சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர் சிண்டிகேட்டுகளை உதாரணமாகக் காட்டிய அவர், ஒரு குடிநுழைவு அதிகாரி 1,000 ரிங்கிட் லஞ்சம் பெறும் போது, அதற்குப் பின்னணியில் இருக்கும் முகவர் 5,000 ரிங்கிட் வரை சம்பாதிப்பதாகச் சுட்டிக் காட்டினார். அரசு மற்றும் எஸ்பிஆர்எம் எடுக்கும் கடுமையான தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி, இத்தகைய இடைத்தரகர்களே அதிகாரிகளைத் தூண்டி ஊழலைத் தொடரச் செய்வதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.

"லஞ்ச ஊழலைத் தடுப்பதிலும் எதிர்ப்பதிலும் எஸ்பிஆர்எம்மின் பங்கை புரிந்து கொள்ளுதல்" என்ற தலைப்பில் பத்திரிகையாளர்களுக்காக கெந்திங் ஹைலண்ட்ஸில் நடத்தப்பட்ட பயிலரங்கின் நிறைவு விழாவை முடித்து வைத்து செய்தியாளர்களிடம் பேசுகையில் அஹ்மாட் குசைரி இதனை விவரித்தார்.

இத்தகைய லஞ்ச ஊழலில் ஈடுபடும் இடைத்தரகர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களைத் திவாலானவர்களாக அறிவிக்கவும், அவர்கள் நாட்டில் எந்தவொரு வியாபாரத்தையும் செய்ய முடியாதபடி தடை விதிக்கவும் எஸ்பிஆர்எம் உறுதி பூண்டுள்ளது என்று அஹ்மாட் குசைரி குறிப்பிட்டார்.

மேலும் லஞ்ச ஊழலை வேரறுக்க அமலாக்க ஏஜென்சிகளில் உள்ள ஓட்டைகளை அடைப்பதோடு, ஊழல்வாதிகளுக்குத் துணைபோகும் இடைத்தரகர்கள் அதன் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அஹ்மாட் குசைரி எச்சரித்தார்.

Related News