இஸ்கண்டார் புத்ரி, நவம்பர்.17-
வீட்டிற்கு வெளியே காய வைக்கப்படும் பெண்களின் துணிகளைத் திருடி வந்ததாக நம்பப்படும் 31 வயது ஆடவர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றப் புகாரைத் தொடர்ந்து அந்த நபர், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் ஜோகூர் கெலாங் பாத்தாவில் கைது செய்யப்பட்டார்.
தனது மனைவியின் ஆடைகள் களவாடப்பட்டு இருப்பதாக 51 வயது நபர் செய்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி எம். குமரேசன் தெரிவித்தார்.
அந்த நபரின் வீட்டை போலீசார் சோதனையிட்ட போது பெண்களின் 64 துணிகள் மீட்கப்பட்டன. இதன் மூலம் கடந்த மே மாதம் முதல் வீடுகளில் துணிகள் திருடப்பட்ட சம்பவங்களுக்குத் தாங்கள் தீர்வு கண்டுள்ளதாக ஏசிபி குமரேசன் குறிப்பிட்டார்.








