Feb 15, 2026
Thisaigal NewsYouTube
நாட்டின் முன்னேற்றத்திற்கு இன ஒற்றுமையே அடிப்படை - பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

நாட்டின் முன்னேற்றத்திற்கு இன ஒற்றுமையே அடிப்படை - பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்து

Share:

ஈப்போ, பிப்ரவரி.15-

மலேசியாவின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையும் நல்லிணக்கமும் மிக முக்கியமான அடித்தளங்கள் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் பன்முகத்தன்மை என்பது மலேசியாவின் பலம் என்றும், அரசியல் நிலைத்தன்மையையும் பொருளாதார வளர்ச்சியையும் உறுதிச் செய்ய இந்த ஒற்றுமையைப் பேணிக் காப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பேரா, தம்பூன் நாடாளுமன்றத் தொகுதியின் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் உரையாற்றிய அவர், மலாய், சீன, இந்திய, பூர்வகுடி மக்கள் அனைவரும் இணைந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பண்பே மலேசியாவின் சிறப்பம்சம் என்றார். ஒவ்வொரு விவகாரத்தையும் எதிர்மறையாகப் பார்க்கும் போக்கு சிலரிடம் இருந்தாலும், மக்கள் நேர்மறையானவற்றில் கவனம் செலுத்தி ஒற்றுமையைப் பலப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அரசாங்கம் வழங்கும் பல்வேறு நிதி உதவிகள், சம்பள உயர்வு போன்ற திட்டங்கள் நாட்டின் அமைதியான சூழலால் சாத்தியமானது என்றும் பிரதமர் சுட்டிக் காட்டினார். இன, மதப் பாகுபாடின்றித் தேவைப்படும் அனைத்து கிராமங்களுக்கும் சமூக நீதி அடிப்படையில் அரசாங்க உதவிகள் சென்றடையும் என்று அவர் உறுதியளித்தார். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கம்போங் கந்தான் பஹாருவின் மேம்பாட்டிற்காக 500 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான நிதியுதவியையும் அவர் இதன் போது வழங்கினார்.

Related News