காஜாங், ஆகஸ்ட்.21-
மலேசிய குடிநுழைவுத் துறை காஜாங்கில் பண்டார் சுங்கை லோங்கில் உள்ள சுற்றுலாப் பகுதியில் செல்லத்தக்க வேலை பெர்மிட் இல்லாத வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் திடீர் சோதனையில் ஈடுபட்டது.
கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி பிற்பகல் 1.40 மணிக்கு குடிநுழைவுத்துறையின் தலைமையக அமலாக்கப் பிரிவால் இந்த சோதனை நடத்தப்பட்டது.
பொதுமக்களின் புகார்கள் மற்றும் இரண்டு வார காலமாக அப்பகுதியில் உளவுத்துறையினர் மேற்கொண்ட கண்காணிப்பு அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
35 அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் 52 வெளிநாட்டவர்கள் மற்றும் 71 உள்ளூர் மக்கள் என மொத்தம் 123 நபர்களிடம் சோதனை நடத்தப்பட்டது.
இதில் 23 முதல் 47 வயதுக்குட்பட்ட மியான்மாரைச் சேர்ந்த 31 ஆண்கள், ஒன்பது பெண்கள், இரண்டு இந்தோனேசிய ஆண்கள், மூன்று வங்காளதேச ஆண்கள் மற்றும் ஒரு தாய்லாந்து பெண் உட்பட 46 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறையினர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.








