கோலாலம்பூர், செப்டம்பர்.18-
நாட்டின் ஜனநாயகம் என்பது வாக்குப் பெட்டியில் வாக்களிப்பது மட்டுமின்றி, அரசாங்கம் எடுக்கும் முடிவுகளைப் பகிரங்கமாகக் கேள்வி கேட்பதும் ஆகும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அப்படி பொதுமக்கள் கேள்வி எழுப்பும் போது தான், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளும், அரசாங்கமும் தங்கள் கடமைகள் மற்றும் பொறுப்புகள் மீது மிகுந்த கவனம் செலுத்துவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் ஜனநாயகப் பொறுப்புணர்வை வளர்ப்பதற்காக, மலேசியா ஒரு சீர்திருத்த செயல்முறையை மேற்கொண்டதாகவும், அதில் நாடாளுமன்ற சேவைகள் சட்டமான PSA மற்றும் பிரதமரின் கேள்வி நேரமான PMQT-யும் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் இன்று வியாழக்கிழமை கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் அன்வார் கூறியுள்ளார்.
அதே வேளையில், PSA-வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து இரு தரப்பு ஆதரவு கிடைத்தது என்று கூறிய அன்வார், அரசாங்கத்திடமிருந்து நாடாளுமன்றத்தை முற்றிலும் சுதந்திரமாக இயங்க PSA வழி வகுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 15-வது நாடாளுமன்றக் கூட்டத்தில், PMQT அறிமுகப்படுத்தப்பட்டது முதல், ஒவ்வொரு செவ்வாய் அல்லது வியாழக்கிழமையில் நாடாளுமன்றத்தில் கேட்கப்படும் 3 கேள்விகளுக்கு பிரதமர் பதிலளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.








