சிலாங்கூர் மாநில அளவிலான தெலுங்கு மக்களின் உகாதி புத்தாண்டு, நேற்று இரவு ஷா ஆலாம், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மலேசிய தெலுங்கு சங்கம் மற்றும் ஷா ஆலாம் தெலுங்கு இயக்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட உகாதி புத்தாண்டு நிகழ்வுக்கு சிலாங்கூர் மாநில மனிதவள மற்றும் வறுமை ஒழிப்புத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு தலைமையேற்றார்.
கோத்தா கமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன், ஷா ஆலாம் மாநகர் மன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரி சாமிநாதன், நாதன் ராஜ், மலேசிய தெலுங்கு சங்கத்தின் துணைத் தலைவர் ஸ்ரீ சத்தியா சுதாகரன் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் மாநில அரசாங்கம் ஆதரவுடன் நடைபெற்ற உகாதி புத்தாண்டு கொண்டாட்டத்தில் பாரம்பரிய முறைப்படி உகாதி பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.
தெலுங்கு கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பாரம்பரிய நடனங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக, இளைய தலைமுறையினர் தெலுங்கு மொழியின் சிறப்பையும், பண்பாட்டையும் தெரிந்துகொள்ளும் வகையில் உரைகள் மற்றும் நடனங்கள் இடம் பெற்றன.
'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற கருப்பொருளை முன்னிறுத்தி, சிலாங்கூர் மக்களிடையே நல்லிணக்கத்தையும் கலாச்சாரப் பிணைப்பையும் வலுப்படுத்துவதை இந்த புத்தாண்டு கொண்டாட்டம், நோக்கமாகக் கொண்டது என்று விழாவிற்கு தலைமையேற்ற ஆட்சிக்குழு உறுப்பினர் பாபாராய்டு தமது வாழ்த்து உரையில் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில அரசு அனைத்து இன மக்களின் கலாச்சார விழாக்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளிப்பதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, சிறுபான்மையினராக இருந்தாலும் தெலுங்கு மக்களின் கலை மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்க மாநில அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என உறுதியளித்தார்.
இதே போன்று மலையாள வம்சாவளியிரின் ஓணம் பண்டிகை, சீக்கியர்களின் வைசாக்கி விழா மற்றும் சித்திரைப் புத்தாண்டு போன்ற விழாக்களை சிலாங்கூர் மாநில அரசு ஏற்று நடத்துவதாக பாபாராய்டு குறிப்பிட்டார்.
சிறப்பு வருகை புரிந்த கோத்தா கமுனிங் சட்டமன்ற றுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தமது உரையில் முதல் முறையாக சிலாங்கூர் மாநில அளவில் மாநில அரசின் ஆதரவுடன் கோத்தா கமுனிங்கில் உகாதி புத்தாண்டுக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டதற்கு தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
விழாவிற்கு சிறப்பு வருகை புரிந்த மலேசிய தெலுங்கு சங்கத்தின் துணைத் தலைவர் ஸ்ரீ சத்தியா, முதல் முறையாக மாநில அளவில் தெலுங்கு புத்தாண்டை வெகுவிமரிசையாக ஏற்று நடத்திய ஆட்சிக்குழு உறுப்பினர் பாபாராய்டு மற்றும் கோத்தா கமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஆகியோருக்கு சங்கத்தின் சார்பில் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
இந்நிகழ்விற்கு மாநில அரசு சார்பில் பாப்பாராய்டு 30 ஆயிரம் ரிங்கிட்டையும். பிரகாஷ் 5 ஆயிரம் ரிங்கிட்டையும், ஷா ஆலாம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாஜி அஸ்லி யூசுப் 50 ஆயிரம் ரிங்கிட்டையும் வழங்கினர்.
விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் பாரம்பரிய 'உகாதி பச்சடி' வழங்கப்பட்டது. வாழ்க்கையின் அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் சமமாக ஏற்றுக்கொண்டு, புதிய ஆண்டை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்ற உன்னதத் தத்துவத்தை விளக்கும் வகையில் ஆறு சுவைகள் கலந்த உணவு பகிரப்பட்டன.










