கோலாலம்பூர், ஆகஸ்ட்.07-
பினாங்கு முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங் சம்பந்தப்பட்ட கடலடி சுரங்கப் பாதை நிர்மாணிப்புத் திட்ட லஞ்ச ஊழல் வழக்கில் அரசு தரப்பின் முக்கிய சாட்சியான டத்தோ ஶ்ரீ ஜி. ஞானராஜா, வழக்கு முடியும் வரையில் தமக்கு பாதுகாப்பு கோரியுள்ளார்.
பெட்டாலிங் ஜெயா, ஜாலான் காசிங்கில் உள்ள ஞானராஜாவின் வீட்டிற்குள் நேற்று நுழைந்த பத்து பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரைக் கண்மூடித்தனமாகத் தாக்கி, காயப்படுத்திய பின்னர் வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை கொள்ளைடித்துக் கொண்டு தப்பிய சம்பவத்தைத் தொடர்ந்து தொலைக்காட்சி பிரபலம் கீதாஞ்சலியின் கணவரான அந்த தொழில் அதிபர், தமக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.
தாம் முக்கிய சாட்சியாக இருக்கும் லிம் குவான் எங் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை முடியும் வரையில், சாட்சிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தமக்கு அதிகாரப்பூர்வமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஞானராஜா கோரியுள்ளார்.
ஞானராஜாவிற்கு அதிகாரப்பூர்வ பாதுகாப்புக் கோரி, ஒரு கடிதம் போலீஸ் துறைக்கு அனுப்பப்படும் என்று அவரின் வழக்கறிஞர் ஆர்.டி ராஜசேகரன் இன்று தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு தமது கட்சிக்காரருக்கு அதிகாரப்பூர்வ பாதுகாப்பு அவசியமாகிறது என ராஜசேகரன் குறிப்பிட்டார்.
இதனிடையே தமக்கும், தமது குடும்பத்திற்கும் போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஞானராஜா வலியுறுத்தியுள்ளார்.
நேற்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஷாருல்நிஸாம் ஜாஃபார் வெளியிட்ட தகவலின் படி, சம்பந்தப்பட்ட தொழில் அதிபர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கும், அவர் முக்கிய சாட்சியாக இருக்கும் வழக்கிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்து இருந்தார்.








