அலோர் ஸ்டார், நவம்பர்.09-
கடந்த வெள்ளிக்கிழமை அன்று கெடா, மெர்கோங்கிலும் கூலிமிலும் நிகழ்ந்த லாரி விபத்துக்களால் ஏற்பட்ட தொழில்துறைப் பொருட்களின் கசிவுகள் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஜாலான் பெர்சியாரான் பண்டார் பாரு மெர்கோங் அருகே சாயத்தைக் கொண்டுச் சென்ற லாரி கவிழ்ந்த நிலையில், ஜாலான் கூலிம் மஹாங் சாலையில் செம்பனை எண்ணெய் ஆலைக் கழிவு நீர் கசிந்தது. இரண்டு சம்பவங்களிலும் சுற்றுச்சூழல் துறையின் துரித நடவடிக்கையின் பேரில் உடனடியாகக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உடனடியாகத் தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டதோடு, கழிவுகள் வடிகாலில் கலப்பதைத் தடுக்க தற்காலிகத் தடுப்புகளும் அமைக்கப்பட்டன. இத்தகைய விபத்துக்கள் ஏற்படும்போது விரைந்து செயல்படத் தேவையான நிலையான இயக்க நடைமுறைகளும் பதிவு செய்யப்பட்ட துப்புரவு குத்தகையாளர்களின் பட்டியலையும் தொழில்துறை நிறுவனங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று கெடா மாநில சுற்றுச் சூழல் துறையின் இயக்குநர், ஷாரிஃபா ஸாகியா சையிட் சஹாப் வலியுறுத்தினார்.








