ஶ்ரீ அமான், நவம்பர்.21-
ஶ்ரீ அமான் மத்திய சிறையில் இருந்து தப்பித்து ஓடிய ஆண் கைதியை, அடுத்த 12 மணி நேரத்திற்குள் பிடித்த போலீசார் மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர்.
ஜோன் சம்பாங் சாங்க என்ற அந்த 39 வயதான கைதி, நேற்று சிறையிலிருந்து தப்பித்து ஓடியதாக ஶ்ரீ அமான் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் டென்னிஸ் புன்யாம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஶ்ரீ அமான் பகுதிகளிலுள்ள கிராமங்கள், தோட்டப்புறங்கள் மற்றும் அதன் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இந்நிலையில், பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், ஶ்ரீ அமான் மத்தியச் சிறையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கட்டி முடிக்கப்படாத வீடு ஒன்றில் பதுங்கி இருந்த அக்கைதியைப் போலீசார் பிடித்தனர்.
இச்சம்பவத்தின் போது பொதுமக்கள் அளித்த ஒத்தழைப்பிற்கு Dennis Bunyam நன்றி தெரிவித்துள்ளார்.








