ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.02-
திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை வைத்திருந்த குற்றத்திற்காக நடவடிக்கை எடுக்காமல் இருக்க 9 ஆயிரம் ரிங்கிட்டை கையூட்டாகக் கேட்டுப் பெற்றதாக நம்பப்படும் உயர் போலீஸ் அதிகாரி உட்பட 5 போலீஸ்காரர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.
20 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐந்து பேரும் பினாங்கு எஸ்பிஆர்எம் அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு, பிற்பகல் மணி 2 க்கும் 5 க்கும் இடைப்பட்ட நேரத்தில் கைது செய்யப்பட்டதாக பினாங்கு மாநில எஸ்பிஆர்எம் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை செபராங் பிறையில் நடத்தப்பட்ட சோதனையில் திருட்டு மோட்டார் சைக்கிள் வைத்திருந்த நபருக்கு உடந்தையாக இருந்ததாக ஐந்து போலீஸ்காரர்களும் சந்தேகிக்கப்படுகின்றனர்.
திருட்டு மோட்டார் சைக்கிளை விலைக்கு வாங்கிய ஒரு மோட்டார் சைக்கிள் பட்டறையிடமிருந்து போலீஸ்காரர் ஒருவர் கையூட்டாக ரொக்கமாக 9 ஆயிரம் ரிங்கிட் பெற்றுச் சென்றதாக நம்பப்படுகிறது.
இந்த ஐவரும் 2009 ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருப்பதை பினாங்கு மாநில எஸ்பிஆர்எம் இயக்குநர் டத்தோ எஸ். கருணாநிதி உறுதிப்படுத்தினார்.
24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட ஐவரும் விசாரணைக்கு பின்னர் எஸ்பிஆர்எம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








