அலோர் ஸ்டார், செப்டம்பர்.14-
கெடா, பெர்லிஸ் மாநிலங்களில் தொலைத் தொடர்பு கோபுரங்களில் கேபிள் திருட்டில் ஈடுபட்ட ஒரு கும்பலை காவற்படையினர் அதிரடியாகக் கைது செய்தனர். இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தொழில்நுட்ப வல்லுநர்களைப் போல நடித்து, போலி திறவுகோள்களைப் பயன்படுத்தி தொலைத்தொடர்பு கோபுரங்களுக்குள் நுழைந்து, கேபிள்களைத் திருடி வந்துள்ளனர் எனத் தெரிவித்தார் கெடா மாநிலக் காவற்படையின் துணைத் தலைவர் படேருல்ஹிஷாம் பஹாருடின்.
இந்தக் கும்பல், மொத்தம் 31 வழக்குகளில் தொடர்புடையது எனத் தெரிய வந்துள்ளது. இந்தக் கும்பலிடமிருந்து, சுமார் 15 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்களைக் காவற்படையினர் பறிமுதல் செய்தனர். இந்த கேபிள் திருட்டு சம்பவங்களால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு 50 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் படேருல்ஹிஷாம் குறிப்பிட்டார்.








