பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்.06-
ஜசெக முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான லிம் குவான் எங் சம்பந்தப்பட்ட பினாங்கு கடலடி சுரங்கப் பாதைத் திட்ட லஞ்ச ஊழல் வழக்கில் அரசு தரப்பின் முக்கிய சாட்சி ஒருவர், பத்து பேர் கொண்ட கும்பல் ஒன்றினால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவம், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அந்த சாட்சியின் வீட்டு வளாகத்தல் இன்று காலையில் நிகழ்ந்துள்ளது.
ஒரு வர்த்தகரான அந்த சாட்சியின் வாயிலும், கைகளிலும் கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட வர்த்தகரின் இரு மெய்காவலர்கள் அந்த கும்பலால் வளைத்துப் பிடிக்கப்பட்டு, கைகால்கள் கட்டப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் லிம் குவான் எங்கிற்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்கில் அந்த வர்த்தகர், அரசு தரப்பின் முக்கிய சாட்சி என்று தெரிவிக்கப்பட்டது.
கை, கால்களை மடக்கிக் கொண்டு, வீட்டில் இருக்கும்படியும், ஹீரோவாக முயற்சிக்க வேண்டாம் என்றும் இதற்கு முன்பு, கைப்பேசியில் தமக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அந்த வர்த்தகர் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் குறித்து கருத்துரைத்த அரசு தரப்பு வழக்கறிஞரான துணை பப்ளிக் பிராசிகியூட்டர் டத்தோ ஷாஹாருடின் வான் லாடிப், வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி நடைபெறும் வழக்கின் போது, நீதிபதியிடம் இது குறித்து புகார் அளிக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.








