ஈப்போ, செப்டம்பர்.29-
நாய் ஒன்றைச் சாகும் வரை இரும்புத் தடியால் அடித்துக் கொன்ற ஆடவர் ஒருவரின் மனிதாபிமானற்றச் செயல் குறித்த காணொளி ஒன்று, சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வரும் வேளையில் அந்த மிருகத்தனமானச் செயலைப் புரிந்த நபருக்கு பிராணி வளர்ப்பாளர்கள் உட்பட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஈவிறக்கமற்றச் செயலில் ஈடுபட்ட அந்த நபர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வரும் வேளையில் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டதை ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹ்மாட் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையின் வழி உறுதிப்படுத்தியுள்ளார்.
ஒரு நிமிடம் 31 வினாடிகள் ஓடக்கூடிய அந்த காணொளி தொடர்பில் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி, ஈப்போ, மெங்களம்பு போலீசார் புகார் ஒன்றைப் பெற்று இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஈப்போ, தாமான் அர்கிட் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகப் பேர்வழியை போலீசார் கைது செய்து இருப்பதாக அபாங் ஸைனால் விளக்கினார்.
2015 ஆம் ஆண்டு பிராணிகள் நலன் காப்புச் சட்டத்தின் கீழ் இந்த விவகாரம் விசாரணை செய்யப்பட்டு வரும் வேளையில் தடுப்புக் காவலுக்குப் பிறகு அந்தச் சந்தேக நபர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நாயை இரும்புத் தடியால் அடிக்கும் காட்சியைக் கொண்ட காணொளியை சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பகிர வேண்டாம் என்றும், இது பிராணிகள் வளர்ப்பாளர்கள் மத்தியில் மன சங்கடத்தை ஏற்படுத்தும் என்றும் அபாங் ஸைனால் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.








