Apr 22, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் டீசல் கடத்தல் முயற்சி முறியடிப்பு: லாரி மற்றும் எரிபொருள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் டீசல் கடத்தல் முயற்சி முறியடிப்பு: லாரி மற்றும் எரிபொருள் பறிமுதல்

Share:

சிலாங்கூர், கிள்ளான் பகுதியில் மானிய விலையிலான டீசலை முறைகேடாக கடத்த முயன்ற ஒரு பெரிய லாரியை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சின் அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பாண்டமாரான் பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் டீசல் நிரப்பிக் கொண்டிருந்த லாரியை அதிகாரிகள் சோதனையிட்டனர். அந்த லாரியின் எரிபொருள் டேங்க் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்டு, அதன் மூலம் டீசலை உறிஞ்சி பெரிய சேமிப்பு டேங்கிற்கு மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தச் சோதனையில் சுமார் 1,000 லிட்டர் டீசல் மற்றும் லாரி உட்பட மொத்தம் 62,000 ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று உள்நாட்டு வாணிபம், பயனீட்டாளர் விவகாரப்பிரிவு அமைச்சின் சிலாங்கூர் மாநில அமலாக்க தலைமை அதிகாரி முகமட் ஹனிசாம் பின் கெச்சக் தெரிவித்தார்.

40 வயதிற்குட்பட்ட லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். மேலும், இதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகக் கருதப்படும் எரிபொருள் நிலையத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முகமட் ஹனிசாம் எச்சரித்துள்ளார்.

மானிய விலைப் பொருட்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க இத்தகைய சோதனைகள் தொடரும் என தெரிவித்துள்ளார்.

Related News