புத்ராஜெயா, ஜனவரி.10-
கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம், தனது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட Cradle Fund நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி நஸ்ரின் ஹசான் கொலை வழக்கில், ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகியும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவரது குடும்பத்தினர் உள்ளனர்.
இவ்வழக்கில், நஸ்ரினின் விதவை மனைவி சமீரா முஸாஃபார், இரண்டு பதின்ம வயது இளைஞர்கள் மற்றும் ஒரு பணிப்பெண் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
என்றாலும், நடைபெற்ற விசாரணைகளின் முடிவில், கடந்த 2022-ஆம் ஆண்டு, அவர்கள் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
மேலும், கடந்த ஜனவரி 7-ஆம் தேதி, ஃபெடரல் நீதிமன்றமும், அவர்களது விடுதலையை உறுதிச் செய்தது.
இந்நிலையில், ஃபெடரல் நீதிமன்றத்தின் முடிவைத் தாம் ஏற்றுக் கொள்வதாக நஸ்ரினின் சகோதரர் டாக்டர் மாலேக் ஹசான் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தின் முடிவிற்கு எதிராக தான் கருத்து கூற விரும்பவில்லை என்றும் கூறிய மாலேக், இறந்த தனது சகோதரரருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்போதும் தமது குடும்பத்தினருக்கு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.








