புத்ராஜெயா, ஆகஸ்ட்.08-
தனது முன்னாள் நிர்வாகத்திற்கு எதிராக முன்னாள் தாதியர் ஒருவர் தொடுத்த வழக்கில் இன்று தோல்விக் கண்டார்.
பணி நேரத்தின் போது தமக்கு ஏற்பட்ட காயத்திற்கு நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி, முன்னாள் தாதியரான 39 வயது எம். தனேஸ்வரி , தனது முன்னாள் நிர்வாகத்திற்கு எதிராக சிவில் வழக்கு தொடுக்க முடியாது என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்குத் தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி சுப்பாங் லியான் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் மூலம் இழப்பீடு பெற்றவர்கள், தனிப்பட்ட முறையில் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடக்கப்படுவதற்கு சொக்சோவின் 31 ஆவது விதி தடை செய்கிறது என்று நீதிபதி சுப்பாங் லியான் சுட்டிக் காட்டினார்.
தனக்கு ஏற்பட்ட காயத்திற்கு தனேஸ்வரி உரிய இழப்பீட்டை சொக்சோவிடமிருந்து பெற்ற பின்னர் தான் முன்பு பணியாற்றிய தோம்ஸன் ஹாஸ்பிட்டல் மருத்துவமனைக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியாது என்று நீதிபதி சுப்பாங் லியான் விளக்கினார்.








