கோலாலம்பூர், நவம்பர்.03-
சிங்கப்பூர் சட்டத்தின் கீழ் முழுமையான சட்டநடைமுறைளைப் பின்பற்றிய பின்னரே மலேசியரான பன்னீர் செல்வம் பரந்தாமன் தூக்கிலிடப்பட்டதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மலேசியா பிற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாத கொள்கையையும், அந்நாடுகளின் இறையாண்மை நிலைப்பாட்டையும் மதிக்கிறது என்றும், கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்னீர் செல்வத்தை வேலைக்கு அமர்த்தியவர்கள் பற்றிய விசாரணை நடந்து கொண்டிருந்த போதே, அவர் தூக்கிலிடப்பட்டது குறித்து, புக்கிட் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் எழுப்பிய கேள்விக்கு, எழுத்துப்பூர்வ பதிலளித்த உள்துறை அமைச்சு, இவ்வாறு தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி, சிங்கப்பூர் போலீசாரின் அனுமதியுடன், பன்னீர் செல்வத்திடம் மலேசியப் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
ஆனால் அவ்விசாரணையில், பன்னீர் செல்வம் குற்றம் சாட்டிய சில நபர்களுக்கு எதிராகப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று மலேசிய போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், வெளிநாடுகளில் வாழும் மலேசியர்கள், அங்குள்ள சட்டங்களை மீறினால், அந்நாட்டின் சட்டங்களின் படி தண்டனைக்கு உட்படுவார்கள் என்றும் அமைச்சு எச்சரித்துள்ளது.
38 வயதான பன்னீர் செல்வம் அக்டோபர் 8-ஆம் தேதி, சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.








