நாடு தொழில்நுட்ப துறையை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளதால் வரும் ஒரு சில ஆண்டுகளில் தோட்டங்களில் செம்பனை பழம் அறுவடை செய்வது மற்றும் அனைத்து துறைகளிலும் இயந்திரத்தின் பயன்பாடு செய்யும் காலம் நெருங்கி வருகிறது.
எனவே தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அதற்கு ஏற்ப தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிலாங்கூர் மாநில தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் வை.தாமசேகரன் கூறினார்.
குறிப்பாக இயந்திரத்தின் மூலம் செம்பனை பழம் அறுவடை செய்தல், டிரோன் மூலம் மருந்து தெளித்தல் மற்றும் பல்வேறு வேலைகளை செய்யும் ஆற்றலுடன் புதிதாக இயந்திரங்கள் பயன்படுத்துவது குறித்து தோட்ட நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன.
வருங் காலத்தில் தோட்டத் தொழிலில் வேலை செய்வதற்கு ஆற்றல் வாய்ந்த தொழிலாளர்கள் மட்டுமே வேலைக்கு உட்படுத்தப்படும் நிலை ஏற்படலாம் என்று தாமசேகரன் கோடி காட்டினார்.
நேற்று முன்தினம் மாலை , கோலசிலாங்கூர், மன்மவுத் தோட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் ஈராண்டு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது சிலாங்கூர் மாநில தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் தாமசேகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போது அன்னிய நாட்டு தொழிலாளர்கள் மாதம் மூவாயிரம் வெள்ளி வரை மாத சம்பளத்தை பெறுகின்றனர். அதேப்போல தோட்டத் தொழிலில் ஈடுபடுவதற்கு இளைஞர்களும் ஆர்வம் காட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் சங்கத்தின் தேசிய தலைவர் எம்.தனபாலன், மாநில தலைவர் சிங்காரம், தலைமைய அதிகாரி நாராயணசாமி உட்பட தோட்ட பொறுப்பாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.








