கோத்தா பாரு, செப்டம்பர்.29-
டெலிகிராம் செயலி வாயிலாக பாலியல் சேவைக்கு அழைப்பு விடுத்த 15 வயது பெண்ணின் விவகாரம் சமூக நல இலாகாவின் பார்வைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக கிளந்தான் மாநில போலீசார் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட பெண், வயது குறைந்தவர் என்பதால், இந்த விவகாரத்தைப் போலீசார் கையாளாமல், சமூக நல இலாகாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யுசோஃப் மாமாட் தெரிவித்தார்.
வயது குறைந்த அந்தப் பெண்ணின் பின்னணியை ஆராய்ந்ததில் அவர், பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்ட பெண்ணாகும். ஏமாற்றம் மற்றும் விரக்தியின் காரணமாக அவர் பாலியல் நடவடிக்கைக்கு வந்து இருக்கலாம் என்று நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அந்தப் பெண்ணுக்கு தற்போதைக்கு நல்லுரைகள் தேவைப்படுகின்றன. எனவே இவ்விவகாரம் சமூக நல இலாகாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.








