கோலாலம்பூர், ஜனவரி.19-
இராணுவத்தைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊழல் விவகாரம் குறித்து மலேசிய மாமன்னர் மாட்சிமை தங்கிய சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
தாம் இந்த ஊழல் விவகாரத்தை, பனிப்பாறையின் ஒரு முனையாக மட்டுமே பார்ப்பதாகவும், குடிநுழைவு, போலீஸ் உட்பட இன்னும் பல துறைகளில் ஊழல் பரவியிருப்பதைத் தாம் உறுதியாக நம்புவதாகவும் மாமன்னர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் கூட ஊழலில் ஈடுபட்டிருக்கலாம் என, இன்று திங்கட்கிழமை தொடங்கிய 15-வது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வின் முதல் கூட்டத்தைத் துவக்கி வைத்த பின்னர், உரையாற்றிய சுல்தான் இப்ராஹிம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த ஊழல் விவகாரங்களைப் பார்க்கும் போது, ஆயுதப்படைகளின் தளபதியாக தாம் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதாகவும் சுல்தான் இப்ராஹிம் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
மேலும், அரசு ஊழியர்கள் லஞ்ச ஊழலில் ஈடுபட்டாலோ அல்லது ஊழல் புரிபவர்களுக்கு உதவி செய்தாலோ அவர்கள் சொந்த நாட்டிற்குத் துரோகம் செய்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் மாமன்னர் வலியுறுத்தினார்.
இன்று காலை 10 மணியளவில், நாடாளுமன்ற சதுக்கத்திற்கு வருகை புரிந்த மாமன்னரை, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துணைப் பிரதமர்களான டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி மற்றும் டத்தோ ஶ்ரீ ஃபாடிலா யூசோஃப் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னணியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபடி, 21 குண்டுகள் முழங்க மாமன்னருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
அதே வேளையில், ராயல் மலாய் படைப்பிரிவின் மத்திய இசைக்குழுவினரால், மாமன்னருக்கு அரச மரியாதை வணக்கமும் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அரச மரியாதை அணிவகுப்பை ஆய்வு செய்த மாமன்னர், அரச மேடைக்குத் திரும்பி, இரண்டாவது முறையாக மரியாதை அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
அதன் பின்னர், மாமன்னர் தமது உரையைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.








