கோலாலம்பூர், நவம்பர்.08-
நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி தெங்கு மைமூன் துவான் மாட்டின் பதவிக் காலத்தை நீட்டிக்காமல் போனதற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்குத் தனிப்பட்ட மறைமுக நோக்கங்கள் இருந்ததாகத் தாம் கூறிய தவறான குற்றச்சாட்டிற்காக பிரதமரிடம் தாம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மலேசிய முன்னேற்றக் கட்சியின் தலைவர் P. வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
முன்னாள் தலைமை நீதிபதி தெங்கு மைமூனின் பதவிக் காலத்தை டத்தோ ஶ்ரீ அன்வார் நீட்டிக்கவில்லை. காரணம், அப்பீல் நீதிமன்றத்தில் அன்வார் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில் தெங்கு மைமூன் தீர்ப்பு வழங்கியிருந்தார் என்று தாம் தவறாகக் கூறிவிட்டதாக வேதமூர்த்தி குறிப்பிட்டார்.
இதற்கு முன்பு தமக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் அப்படியோர் அறிக்கையை வெளியிட்டு விட்டதாகவும், அந்த தகவல்களைத் தற்போது சரிபார்த்ததில் அன்வார் சம்பந்தப்பட்ட எந்தவொரு வழக்கிலும் தெங்கு மைமூன் சம்பந்தப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளதாகவும் வேதமூர்த்தி தெரிவித்தார்.
இப்படியொரு தவறான அறிக்கையை வெளியிட்டதற்காக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வாரிடமும், முன்னாள் தலைமை நீதிபதி தெங்கு மைமூனிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக முன்னாள் ஒற்றுமைத்துறை அமைச்சரான வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.








