பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்.09-
தொலைக்காட்சி பிரபலம் கீதாஞ்சலி கணவரும், தொழில் அதிபருமான டத்தோ ஶ்ரீ ஞானராஜா தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் இதுவரை 14 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பெட்டாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருல்நிஸாம் ஜாஃபார் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை காலையில் பெட்டாலிங் ஜெயா, ஜாலான் காசிங்கில் உள்ள அந்த தம்பதியரின் பங்களா வீட்டில் நிகழ்ந்த இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உதவும் வகையில் மேலும் சில சாட்சிகளை அடையாளம் கண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் பத்து பேர் கொண்ட கும்பல் என்று கூறப்பட்ட போதிலும் கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமராப் பதிவை அடிப்படையாகக் கொண்டு, சந்தேகப் பேர்வழிகள் அடையாளம் காணப்பட்டு வருவதாக ஏசிபி ஷாருல்நிஸாம் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலை நடத்திய கொள்ளைக் கும்பல், 3 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள நகைகள் மற்றும் விலை உயர்ந்தப் பொருட்களுடன் அந்தத் தொழில் அதிபரின் பங்களா வீட்டின் பின்புறமுள்ள காட்டுப் பாதையில் தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.








